சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்த மேலும் ஒரு மோசடி கும்பல் கைது

Posted By:
Published: 22:25






சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பில் ஈடுபட்ட மேலும் ஒரு மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.


அதிரடி வேட்டை


சென்னை நகரில், போலி ஏ.டி.எம். கார்டு, போலி கிரெடிட் கார்டு, போலி அரசு ஆவணங்கள், போலி ரேஷன்கார்டு மற்றும் போலி வாக்காளர் அட்டை தயாரித்து, மெகா மோசடியில் ஈடுபடும் கும்பலை போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த சில நாட்களில் மட்டும், இது போன்ற மோசடி கும்பலைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.


நேற்று மேலும் 5 மோசடி ஆசாமிகள், போலீஸ் வேட்டையில் கைதானார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–


1. சிவசூரியா(வயது 24), வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை. 2. சிஜுஜான் (29) சென்னை மாங்காடு. 3. முருகன் (32)– சென்னை, பம்மல். 4. விஜயகுமார் (36) சென்னை பெரியார் நகர். 5. ராஜா (35) சென்னை, பெரியார் நகர்.


போலி கார்டுகள் பறிமுதல்


மேற்கண்ட 5 பேரில் சிவசூரியா, முருகன், விஜயகுமார் ஆகிய 3 பேரும் முக்கியமானவர்கள் ஆவார்கள். இவர்கள் சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல வணிகவளாகத்தில், பொருட்கள் வாங்க பயன்படுத்திய பொதுமக்களின் ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை தெரிந்து கொண்டு, அவற்றை பயன்படுத்தி, போலி கார்டுகளை தயாரித்து பணம் சுருட்டி உள்ளனர். இவர்களது வீடுகளில் சோதனைபோட்டு, ஏராளமான போலி கார்டுகள், அவற்றை தயாரிக்க பயன்பட்ட இ.டி.சி.மெஷின், என்கோடர் கருவி, கம்ப்யூட்டர் மற்றும் லேப்–டாப் கருவிகள் மற்றும் மோசடி பணம் ரூ.1.20 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.


மேலும் இவர்கள் தயாரித்த போலி ரேஷன் கார்டுகள், அரசு ஆவணங்கள், போலி பேன் கார்டுகள், டிரைவிங் லைசென்ஸ் போன்றவையும் ஏராளமாக கைப்பற்றப்பட்டன. இவர்கள் தயாரிக்காத போலி ஆவணங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு போலி ஆவணங்களை தயாரித்து குவித்துள்ளனர்.


எச்சரிக்கை


இதுபோல் போலி கார்டுகளை தயாரிக்காமல் இருக்க பொதுமக்களுக்கு சில அறிவுரைகள் வழங்கியும், எச்சரிக்கை விடுத்தும் போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:–


* பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டுகள், கிரெடிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை அடிக்கடி மாற்ற வேண்டும். தங்களது கார்டுகளின் சி.வி.வி. எண்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.


* ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கும்போது, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களின் உதவியை பெறக்கூடாது.


* பணம் எடுப்பதற்கு முன்பு, ஏ.டி.எம். எந்திரத்தை நன்கு ஆய்வு செய்ய வேண்டும். பெட்ரோல் விற்பனை நிலையங்கள், வணிக வளாகங்கள், கடைகளில் ஏ.டி.எம். அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது, பொதுமக்கள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். ரகசிய குறியீட்டு எண்களை வெளிப்படையாக சொல்லக்கூடாது.


மேற்கண்டவாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறையில் அடைப்பு


இந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, இதுபோன்ற மோசடி கும்பலை போலீசார் வேட்டையாடி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills