நிமிர்ந்து நில் - விமர்சனம்........! N

Posted By:
Published: 11:50

                          நடிகர்கள்: ஜெயம் ரவி, அமலா பால், சரத்குமார், சூரி இசை: ஜிவி பிரகாஷ் பிஆர்ஓ: ஜான்சன் தயாரிப்பு: கே எஸ் சீனிவாசன் இயக்கம்: சமுத்திரக்கனி 

                        காதல், நட்பு என்ற வட்டத்துக்குள் ஓடிக் கொண்டிருந்த இயக்குநர் சமுத்திரக் கனி முதல் முறையாக ஷங்கர் ஸ்டைலில் ஊழல் எதிர்ப்பு, சமூகக் கேடுகளை சாடல் என்ற ரூட்டைப் பிடித்திருக்கிறார். நாசர் நடத்தும் ஆசிரமத்தில் படித்து, தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஜெயம் ரவி ஒரு மிஸ்டர் பர்பெக்ட். சட்டம் ஒழுங்கை மதிக்காத மக்களையும், லஞ்சத்தில் மூழ்கிவிட்ட சமூகத்தையும் கண்டு பொங்குகிறார். சிக்னலில் மடக்கும் போலீஸ்காரர் ரூ 100 லஞ்சம் கொடு இல்லையேல் நீதிமன்றத்துக்குப் போ என்கிறார். \\

                          ஜெயம் ரவி நீதிமன்றம் போகிறார். தன்னிடம் லஞ்சம் கேட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் ஜெயம் ரவியைப் புரட்டி எடுக்கிறார்கள். சரி, இந்த அமைப்பையே ஆட்டம் காண வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் ஒரு திட்டம் தீட்டுகிறார். 


                              அதாவது இல்லாத ஒரு கற்பனை மனிதனுக்காக அரசு அடையாள அட்டைகள், சான்றிதழ்களை உருவாக்குகிறார், சில நல்ல அதிகாரிகள் துணையுடன். இதற்காக யார் யாருக்கெல்லாம் லஞ்சம் தரப்பட்டதோ அதையெல்லாம் வீடியோவாக்கி கோபிநாத் மூலம் சேனலில் ஒளிபரப்பி அம்பலப்படுத்துகிறார். 

                              இதில் சமூகத்தின் பல மட்டத்தில் பெரும் பதவிகளில் உள்ள 147 பேர் சிக்குகிறார்கள். அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர். தண்டனையும் பெறுகின்றனர். மக்களுக்கு கொஞ்சம் விழிப்புணர்வு வருகிறது. ஆனால் தண்டனை பெற்றவர்கள் ஜெயம் ரவியை பழிவாங்க கிளம்புகிறார்கள். ஜெயம் ரவி அவர்களின் பகையை முறித்து எப்படி நிமிர்ந்து நிற்கிறார் என்பது க்ளைமாக்ஸ். 

                                 படத்தின் நிஜமான ஹீரோ சமுத்திரக்கனியின் பட்டையைக் கிளப்பும் வசனங்கள். முன்பெல்லாம் கதை வசன ரிக்கார்ட் அல்லது கேசட் போடுவார்களே... அப்படி இந்தப் படத்தின் வசனங்களுக்காகவே ஒரு சிடி போடலாம். சாம்பிளுக்கு சில: 'இந்த நாட்ல உண்மையை உண்மைன்னு நிரூபிக்கவே இருபது வருஷமாவது ஆகும்...' 

                         "இலங்கைல கொத்துக் கொத்தா தமிழர்கள் செத்துக்கிட்டிருந்தப்போ நாம ஐபிஎல் மாட்ச் பாத்துக்கிட்டிருந்தோம். அங்க நடந்தது இங்க நடக்க எவ்வளவு நாளாகிடப் போகுது' 'உன்னை மாதிரி வாழ்து கஷ்டம்.. அதான் உன் கூடவாவது வாழலாம்னு வந்துட்டேன்' திரைக்கதையை இடைவேளை வரை அப்படி ஒரு இறுக்கமும் விறுவிறுப்புமாகச் செதுக்கிய இயக்குநர் சமுத்திரக்கனி, அதன் பிறகு இப்படித் தடுமாறியது ஏன் என்று புரியவில்லை. 

                                படத்தின் இன்னொரு பிரச்சினை பாடல்களும் இசையும். இந்த மாதிரி கதைகளுக்கு பாடல்கள் ஏன் என்ற கேள்வி முன்னிலும் வலுவாக எழ ஆரம்பித்துவிட்டதை இசையமைப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சரி, பின்னணி இசையாவது கை கொடுக்கிறதா என்றால்... ம்ஹூம்.. ஜிவி பிரகாஷையும் சேர்த்துச் சுமக்கிறது சமுத்திரக்கனியின் திரைக்கதை! சரத்குமார் பாத்திரத்தை இன்னும் கச்சிதமாக உருவாக்கியிருக்கலாம். ஜெயம் ரவி இன்னும் பல படிகள் உயர்ந்து நிற்கிறார் பார்ப்பவர் மனதில். 

                                     அத்தனை கடின உழைப்பு.. மிக இயல்பான நடிப்பு. அப்பாவி அரவிந்துக்கும் ஆந்திர நரசிம்ம ரெட்டிக்கும் அவர் காட்டியுள்ள வித்தியாசம்.. ஆக்ஷன் ஹீரோவாக ஆசைப்படும் அத்தனைப் பேருக்கும் பாடம்! ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் தடுமாறியதில் கனியின் பங்கை விட ஜெயம் ரவி அன்ட் குடும்பத்தினர் பங்கு நிறைய இருந்திருக்கும் போலிருக்கிறது. 

                                           சமுத்திரக்கனி மாதிரி படைப்பாளிகளை சுதந்திரமாக இயங்க விட்டால், இன்னும் அழுத்தமான படைப்புகள் கிடைக்கும் என்பதை ஜெயம் ரவிகள் புரிந்து கொள்ள வேண்டும். அமலா பால் இந்தப் படத்தில் உண்மையிலேயே அழகாக நடித்திருக்கிறார். சூரிக்கு நகைச்சுவையோடு நடிப்பைக் காட்டவும் வாய்ப்பு. இந்தப் பாணியை தொடர்வது அவர் கேரியருக்கு நல்லது. 

                                                        ஒரு நேர்மையான அதிகாரிக்கு வால்டர் பெயரை வைத்திருக்கிறார் கனி. வால்டர்கள் நிஜத்திலும் இப்படி இருந்துவிட்டால் நன்றாக இருக்கும் என நினைத்து வைத்திருப்பாரோ! லாஜிக் மீறல்கள், தடுமாறும் பின்பாதி சில எதிர்மறையான விஷயங்கள் படத்தை பின்னுக்கு இழுத்தாலும்... நிமிர்ந்து நில் நிச்சயம் தவற விடக்கூடாத படம்தான். 

                                      காரணம் இந்தப் படத்தின் நோக்கம். நாம திருந்தினால் நாடு திருந்தும் என்பது எத்தனை அப்பட்டமான உண்மை! சீமான் எப்படி தம்பி என்ற படத்தை தன் வசனங்களால் தூக்கி நிறுத்தினாரோ, அப்படி இந்தப் படத்தையும் நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி, நல்ல நோக்கம் மற்றும் அனல் தெறிக்கும் வசனங்களால்!...........................!

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills