போலியோ இல்லாத நாடாக இந்தியா..!

Posted By:
Published: 05:00



போலியோ இல்லாத நாடாக இந்தியாவை உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை அறிவித்தது.


இதன் மூலம் உலக சுகாதார அமைப்பால் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள 11வது நாடு இந்தியாவாகும்.


இதற்கான சான்றிதழை புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளிடம் இருந்து இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆஸாத் பெற்றுக் கொண்டார்.




இதுகுறித்து குலாம் நபி ஆஸாத் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் போலியோ ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் போலியாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது கடந்த 1995ஆம் ஆண்டு போலியோவை முழுவதுமாக ஒழிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து, இந்தத் திட்டத்திற்காக அரசு நிதி ஒதுக்கியது, திட்டத்துக்கான தீவிர கண்காணிப்பு மற்றும் உயர் அதிகாரிகளின் அயராத முயற்சி போன்றவை காரணமாக இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.


போலியோவை ஒழிக்க 23 லட்சம் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட குழுக்களும், 1,50,000 கண்காணிப்பாளர்களும் இரவு பகலாக நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் சென்றடைந்துள்ளனர் என்றார் குலாம் நபி ஆஸாத்.


மேலும் போலியோ ஒழிப்பில் அரசுடன் இணைந்து பாடுபட்ட உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills