திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு இலங்கை முட்டுக்கட்டையா?

Posted By:
Published: 22:34






தமிழகத்தில் திருச்சி மற்றும் கோவை

உள்பட நாடு முழுவதும் 5 விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக தரம் உயர்த்த 4.10.2012-ல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


திருச்சி விமான நிலையத்தில் தற்போது ஓடுதளம் 8,000 அடி நீளம் உள்ளது. ஆனால் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்போது, இந்த ஓடுதளத்தின் நீளம் 12,000 அடி நீளமாக அதிகரிக்கப்பட வேண்டும். ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்து அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு விமான நிலைய ஆணையம் கோரிக்கை விடுத்தது.


இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில், விமான நிலைய இயக்குநர், இணை இயக்குநர் (வேளாண்மை), துணை இயக்குநர் (தோட்டக்கலைத் துறை), உதவி இயக்குநர் (நில அளவை), வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.


இந்த குழுவால், ஓடுதள விரிவாக் கத்துக்கு 510 ஏக்கர் நிலம் தேவை என கண்டறியப்பட்டது. இதில் 168.48 ஏக்கர் நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது. ராணுவ நிலத்தை பெறுவது தொடர்பாக ராணுவ அமைச்சகத்துக்கு கடிதங்கள் எழுதப்பட்டன. ஆனால் எவ்வித பதிலும் இல்லை.


இந்நிலையில், விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக நீடிக்கும் தடைகளைக் களைய வேண்டுமென மக்களவையிலும், ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியை சந்தித்தும் ராணுவ நிலத்தை ஒப்படைவு பெற அனுமதி அளிக்கக் கோரி கடந்த ஆண்டில் திருச்சி மக்களவை உறுப்பினர் ப.குமார் மனு அளித்தார்.


இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி ப. குமாருக்கு அனுப்பிய கடிதத்தில், “ராணுவ நிலத்தை கோரும்போது, அதற்கு இணையான மதிப்புடைய நிலத்தை ராணுவத்துக்கு மாநில அரசு வழங்க வேண்டும். இதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டால் விரிவாக்கத்துக்கென 168.48 ஏக்கர் நிலத்தை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், திருச்சியில் சர்வதேச விமான நிலையம் அமைந்தால், அது தங்கள் நாட்டின் விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை கருதி, திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு மறைமுகமாக முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது.


இது குறித்து திருச்சி மக்களவை உறுப்பினர் ப. குமாரிடம் கேட்டோம். அவர் கூறியது: “நீங்கள் சொல்வது புதிதாக உள்ளது. தமிழக மக்களின் நலன் முக்கியம் என தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். திருச்சி மக்களின் தேவைகளை முதன்மையாகக் கொண்டு நான் மக்களவையில் முன்வைத்த கோரிக்கைகளில் விமான நிலைய விரிவாக்கமும் ஒன்று. திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு முதலில் ராணுவ நிலத்தை ஒப்படைவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவத்துக்கு வழங்குவதற்கான மாற்று இடமும் தயாராக உள்ளது. இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியரும் மிகுந்த முனைப்போடு செயலாற்றி வருகிறார். இதை மீறி வேறெதும் தடைகள் இருப்பதாகத் தெரியவில்லை” என்றார் அவர்.

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills