பிரசாரத்தில் பைனல் டச் கொடுத்த ஜெ ..! 41 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம்… !

Posted By:
Published: 22:21

                                               எனது பேச்சில் நயவஞ்சகம் இல்லை. மக்களை ஏமாற்றும் சிந்தனை இல்லை. சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் பேச்சு இல்லை. மாற்றுக்கருத்து கொண்டிருப்பவர்களையும், வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும், கீழ்த்தரமாக விமர்சிக்கும் பேச்சு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா சென்னை தியாகராயநகரில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 40 வேட்பாளர்கள், ஆலந்தூர் இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளரை அறிமுகப்படுத்தி, பேசினார்.

                     அப்போது அவர் கூறியதாவது: இந்த தேர்தல் தருமத்திற்கும், அதருமத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். மெய்மைக்கும், பொய்மைக்கும் இடையே நடைபெறுகின்ற தேர்தல். நான் கடந்த ஒரு மாதங்களாக அனைத்து தொகுதிகளுக்கும் சென்று சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறேன். எனது பேச்சில் நயவஞ்சகம் இல்லை. மக்களை ஏமாற்றும் சிந்தனை இல்லை. சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் பேச்சு இல்லை. மாற்றுக்கருத்து கொண்டிருப்பவர்களையும், வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும், கீழ்த்தரமாக விமர்சிக்கும் பேச்சு இல்லை. வயதை காட்டி வாக்கு யாசகம் செய்யும் பேச்சு இல்லை. 

                 மாறாக, தமிழர்களின் வாழ்வில் வசந்தம் வீச வழிவகுக்கும் பேச்சாக, ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுக்கும் பேச்சாக, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் பேச்சாகத்தான் என்னுடைய உரைகள் அமைந்தன. எனது தேர்தல் பிரசாரத்தில் உண்மையையும், யதார்த்தத்தையும் மட்டுமே நான் எடுத்துரைத்தேன். அவை எல்லாம் எனது உள்ளக்குமுறல்கள்.

            இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்பட்ட போது; மீனவர்களை "பேராசை பிடித்தவர்கள்" என்று சொல்லி மீனவர்களை காட்டிக்கொடுத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி இலங்கை தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக்கொடுத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
இப்படிப்பட்ட கருணாநிதி, 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் தன் மகளை காப்பாற்ற என்ன விலை கொடுக்கவும் தயாராக உள்ளார்! இதற்காக யாரையும் ஆதரிக்க அவர் தயாராக உள்ளார். 
                        எனவே, இப்படிப்பட்ட கட்சிக்கு வாக்களிப்பது ஒரு குடும்பத்திற்கு வளம் சேர்க்குமே ஒழிய தமிழ்நாட்டிற்கு வளம் சேர்க்காது. எனவே, தி.மு.க.விற்கு வாக்களிப்பது நம்மை நாட்டை சுரண்ட அனுமதிக்கும் செயல்.இந்த தேர்தலில் நீங்கள் காங்கிரசுக்கும், தி.மு.க.விற்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க.வுக்கு நீங்கள் சவுக்கடி கொடுத்து ஓட, ஓட விரட்ட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் அவர்களுடைய வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.மீனவர்களுக்கு தி.மு.க. துரோகம் செய்ததைப்போல நான் செய்யவில்லை; செய்யவும் மாட்டேன். 

                            காவிரி, முல்லைப் பெரியாறு ஆகிய நதிநீர் பிரச்சினைகளில் தமிழகத்தை தி.மு.க. வஞ்சித்தது போல் நான் செய்யவில்லை; செய்யவும் மாட்டேன். சில்லரை வணிகத்தில் கருணாநிதி ஏமாற்றியது போல், நான் செய்யவில்லை; செய்யவும் மாட்டேன். ஒரு தாய் தன் குழந்தைகளிடத்தில் எந்த அளவுக்கு அன்பும், பாசமும் வைத்திருப்பாளோ, அதைப் போல், நான் உங்களிடத்தில் அன்பும், பாசமும் வைத்து இருக்கிறேன்.உங்கள் நலனுக்காக உழைத்துக்கொண்டிருப்பவள் நான். உங்கள் நலனுக்காக பாடுபட்டுக்கொண்டிருப்பவள் நான். ஏனென்றால், தமிழக மக்களாகிய நீங்கள் தான் என் மக்கள். 
                            எனக்கு நீங்கள் தான் எல்லாமே. என்றைக்கோ என்னை நான் உங்களுக்கு அர்ப்பணித்து விட்டேன். என்ன விலை கொடுத்தும் தமிழகத்தின் உரிமையை, தமிழக மக்களின் உரிமையை நிலைநாட்டக்கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.சிறுபான்மையின மக்கள் நலனுக்காக வாய்ப்பந்தல் போடாமல் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துகிற இயக்கம் அ.தி.மு.க. உங்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கக் கூடிய வலிமையை நீங்கள் எனக்கு கொடுங்கள் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.பாஜக உடன் ஒரு சில உதிரிக்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. 

                                      அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்த கொள்கையும் கிடையாது. அந்த கட்சிகள் கூட்டணி அமைப்பதற்குள் நடத்திய கூத்துகள் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். இன்னமும், அந்த கூட்டணி குழப்பத்தில் தான் இருக்கிறது.நாடாளுமன்ற லோக்சபாஉறுப்பினர் பதவியை அடைய வேண்டும், அமைச்சர் பதவிகளை தனக்கும், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணம், ஒரே குறிக்கோள் தான் அந்த கட்சிகளிடம் உள்ளது.இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, காவிரி நதிநீர் பிரச்சினை என தமிழக மக்களின் முக்கிய பிரச்சினைகள் எதுவுமே பாஜக தேர்தல் அறிக்கையில் இல்லை. இந்த கூட்டணியால் தமிழகத்திற்கு எதுவும் செய்ய முடியாது. எனவே, இந்த கூட்டணிக்கு வாக்களிப்பதும் பயனற்றது.மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். 

                                அப்பொழுது தான், தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். வஞ்சிக்கப்பட்ட தமிழகமே விழித்தெழு! நமக்கு உரிய உரிமையை பெற்று விட்டோம் என உரக்கச் சொல்! வளர்ச்சிக்கான வழி தெரிந்துவிட்டது என இருமாப்பு கொள்! தமிழகத்தை வாழ வைக்க அ.தி.மு.க.வால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து கொள்.அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரையும் இங்கு நான் உங்களுக்கு ஒட்டுமொத்தமாக அறிமுகம் செய்துவைக்கிறேன். 

                 இவர்கள் அனைவருக்கும் "இரட்டை இலை" சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும். உண்மை ஒளிக்கும், பொய்மை இருளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வாய்மை வெல்ல அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills